புதன், 6 ஜனவரி, 2010

ஒரு பிடி காற்றுக் கோளம்




ஆரோகணமும் அவரோகணமும்
புணர்ந்துகொண்டிருந்தது,
ஆழியொத்த தாழி ஒன்றில்,
கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப
சபிக்கப்பட்டிருந்தது..

அரவமொத்த பாத தீண்டல்கள்
சாகா வரம்பெற்று உருண்டுகொண்டிருந்தது
பூகோள பந்தொன்று..

ஆயிரம் சூரிய பார்வை ஒற்றை வட்டத்திற்குள்
எட்டுத்திக்கும் நிழல் விம்மம்..

பச்சை பாய் கிடத்தி காலனிட்ட
உந்துதலில் ஓலமிட்டும்  மரிக்கக் கடவாத
ஒரு பிடி காற்றுக்  கோளம்...

(நன்றி நேசமித்திரன்)

வெள்ளி, 1 ஜனவரி, 2010

நகல்


ஒரு போக்குவரத்து சாலை நிறுத்தத்தில்
நம் வலையுலக ஜாம்பவான்களின் வரிகள்
எப்படி இருக்குமென்று ஒரு சிறு கற்பனை..

 
நேசமித்திரன்


மேகம் புணர்ந்த துளிகளில் அழுக்ககற்றி குளித்தது  
சேன்றோவின் வைபர் கைகள்,
மரித்துக்கொண்டிருந்த சிகப்பு வினாடிகளில்
கசிந்துகொண்டிருந்தது சைலன்சர் சுருட்டு.

மெர்சிடிசின் யன்னலில் நிழல் முகம்
ஒப்பனை செய்துகொண்டிருந்தது
சாலை கடந்த கிளையொன்று.
தரை புணர்ந்த தடம் விட்டுசென்றது
தண்ணீர் வாகனம் பச்சை ஒளி கடந்து... 
    
பா.ரா


நின்ற வாகனத்தில் விழித்தெழுந்தான் பிஞ்சுக்கரம் பட்டு,
கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தாள் பெண்ணொருத்தி,
மாமாவ புடிச்சுக்கோ என்றாள் மூன்று வயது மகனிடம்,


லூனுக்கு விழைந்து அழுதவனை அதட்டினாள்
உங்கப்பன் சரியா இருந்தா நமேக்கேன்டா
இந்த நிலைமையென்று குரல் தழுத்தாள்..


ங்கோ தப்புணர்ந்தவன் வேகமாய் இறங்கி
வாங்கி வந்தான் கைநிறைய பலூன்களுடன்
அழுத குழந்தையின் கைகளில் ஒன்றை திணித்து..


சிறு சிறு ஊதல்களில் பெரிதாகும் பலூனைப்போல்
சிறு சிறு ஊடல்களில் பெரிதாகும் பந்தம்
உணர்ந்தவனாய் விட்டுவந்த மனைவியையும்
குழந்தைகளையும் எண்ணி பேருந்து நிற்கும்முன் 
இறங்கிகொண்டிருந்தது அவன்மனம்
அடுத்த நிறுத்தத்தில்....  


(நேசமித்ரா, பா.ரா பிழையிருந்தால் மன்னியுங்கள் 
உங்கள் நிழலாய் நானும் வரைந்து 
வடித்து பார்க்கின்றேன் அவ்வளவே)

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..          

வெள்ளி, 25 டிசம்பர், 2009

சிந்தனை துளிகள்..3


நேற்றைய அனுபவம்,
இன்றைய சிந்தனை!
இன்றைய சிந்தனை, 
நாளைய வழிகாட்டி!
நாளைய வழிகாட்டி, 
இன்றைய தத்துவம்..

தெய்வ நம்பிக்கை என்பது 
உன் உடலில் இருக்கும் 
குருதி போன்றது,
ஒவ்வொரு துளி சிந்தும்பொழுதும் 
உன் இறை நம்பிக்கையை 
நினைவுபடுத்திக் கொள்கிறாய்.

நீ கடந்து சென்ற பாதையில்தான் 
நீ மறந்து சென்ற வழிகள் இருக்கும் 
நீ மறந்து சென்ற வழிகளில்தான் 
நீ கடந்துவிட்ட வாழ்வு  இருக்கும்..

மண்ணில் இருக்கும்
இரும்பு துகள்களுக்குகூட ஒரு 
காந்தபுலன் கிடைத்துவிட்டால் 
எழுந்துவிடுகிறது,
நீயும் உன் திறமைகளுக்கான 
புலனில் எழாவிட்டால்...
உன் திறமைகளும் மண்ணில் 
மறைந்த துகள்களே..!

 

சனி, 12 டிசம்பர், 2009

சகவாச சேறு


நத்தையிட்ட ஈரம்போல்
நகர்ந்துகொண்டிருந்த பின்னிரவு,

அரவமற்ற அறையினில்
அழுதுகொண்டே தீர்ந்துகொண்டிருந்த 
மெழுகுவர்த்தியாய் அவள்..

மது நீர்த்து மாது தீர்த்திட 
கூலி கொடுக்கிறது மாமிச பட்சி,
பட்சியாய் நுழைந்ததெல்லாம்
பச்சையாய்.....!

வீணையவள் மீட்டப்படுகிறாள் 
ஈன ஸ்வரங்களாய்..
மீட்கப்பட முடியாமல்...
தந்தியறுத்து தந்தியறுத்து
பிணைக்கப்படுகிறாள் மீண்டும் 
பந்தி படைக்க.. 

என்றோ பூக்களைகூட பாரமென 
வீசியவள் தலைக்கனம் 
சகவாச சேற்றினில் விழுந்து 
புரளமுடியாமல் புலம்புகிறது..

நாதியறுத்து வந்தவளின் 
நாடியறுக்கும் உலகினில்..

வெள்ளி, 4 டிசம்பர், 2009

ஓரடிக்கயிறு



மாலையின் முற்பொழுதொன்று,
ஆயிரமாயிரம் சுக துக்க சமிக்கைகளை
தாங்கி நின்ற தந்தி கம்பமொன்றில்
பசுவும் இளம் கன்றும் ஒன்றாக
பிணைக்கப்பட்டிருந்தது ஓரடி கயிற்றினில்..

பசியுற்ற கன்று பசுவின் மடி தேட எத்தனித்தது, 
கயிற்றின் கருணைக்குறைவால் கழுத்தழுந்தியது.
கன்றுணர்ந்த பசுவும் மடி கொடுக்க முயன்று முயன்று   
தோற்றது பிடி கொடுக்காத கயிற்றின் முனையில்..

தந்திக்கம்பத்துக்கும்  பசுவுக்கும் இடையில் 
கயிறு வீணையிட்ட தந்தியாய் துடித்தது,
எங்கோ அழு குரல் கேட்டு விழிக்கின்றான் 
உண்டு களைத்த கறவைக்காரன்..

கறக்க வந்தவன் கட்டவிழ்க்கின்றான் 
கன்றுக்கு கண நேர அனுமதியுடன்..
கயிற்றில் புண்பட்ட பசு கன்றின் மெய்பட்டு 
சிலிர்த்து முத்தமிட்டது மொத்த ரணம் தீர்ந்ததாய்..
முட்டிக்குடித்த கன்று பிரிக்கப்பட்டது
கருணையின் நேரம் தீர்ந்ததாய்..

இனி மடியின் குருதி வரை 
கறக்கவிழைபவனை பார்க்கின்றது, 
நிசியில் வன்புணரும் கடைசிக்காமுகனுக்கு  
பொறுத்துக்கொண்டு கை இறுக்கும் தாசியைப்போல்...




(இது உரையாடல் சமுக கலை இலக்கிய அமைப்பு 
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)

வியாழன், 26 நவம்பர், 2009

பசி


மாரில் தங்கமறுத்த பாலுக்கு
விழைந்து வீறிட்ட குழந்தையை
இடுப்பில் தக்க வைத்து
இறைஞ்சுகிறாள்...
இரக்கமற்றவனின் வாகன யன்னலும்
இறங்க மறுக்கின்றது..
சிவப்பு விளக்கு நிறுத்தத்தில் 
பச்சிளம் தளிரின் பசி நிறுத்தமுடியாமல்..

யாசித்தவனுக்கு 
யோசித்து சட்டைப்பை தடவி 
தொட்டு விழுந்த ஒற்றை காசில் 
திறந்தது பசியடைத்த செவிகள்..

விருந்தொன்றில் 
பசியற்றவன் புசித்த மிச்சம் 
நிரப்புகின்றது குப்பைத்தொட்டியின் 
வயிற்றினை..

யாக்கையின்
முதல் வேட்கை 
தணிய துணிந்த 
பிச்சையாய்... 

வெள்ளி, 20 நவம்பர், 2009

கண்ணாடி முன்



கண்ணாடி முன்
கவிதையாய்
நான்..
கவிதையின்
அர்த்தமாய்
என்றும் நீ..

இதயத்தில்
உன்னை
தேடினேன்...
என்னை
தொலைத்துவிட்டு..

பெரிதான 
அன்பின் முன் 
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான 
உயிரிலும் 
பெரிதாக 
கலந்தது 
உன் அன்பு..

நீயும்
நானும்
பற்றிக்கொள்ள
பற்றிக்கொண்டது
காதல்
நெருப்பு..