வெள்ளி, 27 மே, 2011

அன்பே...


இரவையும் பகலையும் நிரந்திரமாய் 
கிடைக்கப்பெற்ற உலகமிது,
பகலை இருட்டிப்பு செய்யவும் 
இருளை வெளிச்சமாக்கவும்  
துடிக்கும் மனித முயற்சிகள்..

மழலை என்பது அதிகாலை 
முதுமை என்பது அந்தி,
மிகிந்து குறையும் 
வளர்ந்து தேயும் உலக வாழ்வில் 
நிரந்திரம் எதுவுமில்லை.

அன்பையும் பசியையும் 
இழந்த மனிதன்தான் 
பண்பையும் பரிவையும் மீறுகின்றான்

சுயம் சுற்றும் உலகில் 
சுயம் பெற்றவன் மனிதனே!
மனிதனின் மகத்துவம் மறைக்கும் 
மனித கொள்கையில் பிறந்த கடவுள்.

கண்டு  கொள்ளமுடியாத அன்பில்   
காணாமல் கிடைத்ததாம் பக்தி.
கடவுள் என்பது சுய நம்பிக்கைக்கு 
வைக்கப்படும் ஓர் புள்ளியே!
கடந்தவன் தெய்வமாகிறான் 
கடக்காதவன் தெய்வம் படைக்கின்றான்,

அறிவு என்பது ,
முன்னால் படைக்கப்பெறுவதில்லை
உன்னால் கிடைக்கப் பெறுவதே!

அன்பு என்பது, 
படைத்து  பெறுவதல்ல 
கிடைத்து பெறுவதே!
கிடைக்காமல் பெற முயற்சிக்கும் 
எண்ணம் கடவுள்..
கிடைத்தும் கொடுக்க மறுக்கும் 
நிலை மனிதன்.

இருப்பதை கொடுக்க (அன்பு) மறுப்பதில்தான் 
இல்லாததில் நம்பிக்கை (கடவுள்) பிறக்கின்றது.

உலகம் ஒன்றுபட, 
அன்பை தேட முயலாதிர்கள், 
அன்பை கொடுக்க முயலுங்கள்.

அன்பிற் சிறந்த கடவுளுமில்லை 
உன்னில் பிறக்காத அன்புமில்லை..


திங்கள், 23 மே, 2011

நீ ஒன்றே!



நினைவுகளை திருத்தி பார்க்கின்றேன்
அதன் நிழல்கள் மாறவில்லை,
உலகமே உயிர் பெற்றிருந்தாலும்
அகம் தேடும் உயிர் நீயல்லவா!

கேள்விகளுக்காகவே காத்திருக்கும் 
பதில்போல் உன் 
அய்யங்களுக்காகவே என் மெய் 
விழித்திருக்கின்றது.

அறிந்தவளின் அறியாமையில் 
அறிந்து கொள்ளும் அதிசயங்கள்  பல,

புரிந்தவளுக்கு புதிதாய் 
எத்தனை வருடங்கள் பிறந்தாலும்
உன் அன்பின் இளமை படிக்க 
வயதில்லையடி எனக்கு.. 

உலகம் ஒன்றல்ல..
உணர்வில் நீ ஒன்றே..







வியாழன், 14 ஏப்ரல், 2011

தமிழ் பூ



சாய்ந்து சுற்றும் உலகினில் 
நிமிர்ந்தெழும் நிதர்சனம் நீயடி, 
பருவ மங்கையின் சிரிப்பாய், சிலிர்ப்பாய் 
சப்தங்களையும் சந்தங்களையும் 
பிணைத்து பிரசவிக்கும் தமிழ்த்தாய்! 

ஒற்றை குழல் ஓசையாய்,
நாவிக் கமல நாதமாய்,
விண்ணதிரும் முரசுகளாய்,  
உலகெங்கும் விரிந்தாய் 
உணர்வெங்கும் பதிந்தாய்.

அழகை சொல்ல வந்த அழகே!
உன்னை பழகச் செய்ததென் பாக்கியமல்லவா!
இணை பிரியாமல் துணை  புரியும் உன்
அணை பிரிய மறுதலிக்குமடி மனது.

எத்தனை மெல்லிய அன்புகளால் 
என்னவளின் இதயம் திருட செய்தாய்,
அவளை கண்டு உன்னை உணர்ந்தேன் 
உன்னை கொண்டு அவளிதயமடைந்தேன்..

மொழிகளுக்கெல்லாம் மேல் நின்று 
வழி சொல்லும் உன் அகரமும் லகரமும் 
சிகரம் தொட்டதென்றால் மிகையாகாது 
என் தமிழே!

அனைவருக்கும் என் இனிய 
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  

புதன், 9 மார்ச், 2011

பெண்மையே!


பெண்மையே!

உன்னை புரிந்து புரிந்து 
பிரிகிறேன் பிரியமுடியாமல்,
உயிர் கொடுத்து உயிர் எடுக்கும்
உன் பிரம்மம் ஓர் சூத்திரமே..

அணையக் கிடைத்ததில் எல்லாம் 
அடை காக்கவில்லை,
இணையக் கிடைத்ததில் விடை தராமல் 
விடை பெரும் அம்புகளாய் எத்தனை கோடி..

உடலும் கடலென மூழ்கிய முத்துக்களில் 
என்னை மட்டும் தத்தெடுக்கும் அன்னை சிற்பியே!


தன்னை அறியா தளிரும் உன்னை அறியும்..
என்னை அறிந்து புரியக் கிடைத்த பிரியம் 
உலகில் நீயல்லவா பெண்மையே!..   

சனி, 26 பிப்ரவரி, 2011

அகயுகம்



அகம் தர மறுத்த 
ஞானம் எதுவுமில்லை,

யுகம் எங்கும்  பிறர் பொருள் 
தேடாதவரை.

உன்னில் மூழ்க 
கிடைக்கும் முத்து 
ஆழியிலும் கிடைத்திடாது..

அன்பை சொல்ல 
ஞானம் தேவை இல்லை ..

ஞானத்தின் அன்பில் 
அன்பை தவிர வேறெதுவுமில்லை.

இரு மெய் புணர் உலகில் 
பொய்யென யாரும் பிறப்பதில்லை.


தன்னை சுற்றும் 
உலகம் மாறவில்லை 


உன்னை சுற்றும் 
உலகில் உன்னில் 
சற்றும் உணராதிருந்தால்..
என்ன சுற்றி பயன் அதற்கு..


யுகத்தின் பொருள் அகம் 
அகத்தின் பொருள் யுகம் 


யுகத்தில் நீயென 
கிடைக்கப்பெறுவதை விட 
யுகமே நீயனே உணர்ந்திடு
அகமே.......



   




திங்கள், 14 பிப்ரவரி, 2011

அன்பில் மட்டும் அர்த்தமாகி..



உன்னை விழிக்க செய்து 
உறங்கி போகும் நினைவுகள்.. 


காலத்தின் கணிசமான 
இழப்புகளையும் ஈடு செய்ய 
துடிக்கும் அலைபேசி பரிமாற்றங்கள்..


நிஜங்களில் திளைந்து 
நினைவுகளை சுமந்து 
கனவுகளை கரை சேர்க்க 
துடிக்கும் இந்த புனித பயணம்.


வாழ்வின் மாற்றங்களில் 
மாற்றம் தராத உன் நேசம்..


துடித்து செல்லும் காலத்திலும் 
அடித்து செல்லாத உன் அன்பு..


அடுத்து சொல்ல வார்த்தை இல்லை 
அன்பில் மட்டும் அர்த்தமாகி போகிறேன்.. 


சனி, 5 பிப்ரவரி, 2011

உலகத்தில் நீ

இன்னமும் எண்ணமுடியாத  நட்சத்திரங்களின் முன் 
எண்ண முடியும் 
எண்ணமற்ற மனிதர்களாய் நாம்..


மனம் கொல்லும் மனிதன்தான் 
மனிதர்களை கொல்ல முடியும். 


தினம் படைத்த பூமியும் 
கணம் மாறவில்லை,


மனம் கிடைத்த மனிதனே!
கணமெல்லாம் ரணம் செய்து 
யுகம் வளர்த்திடும் உன் 
முகமும் அகமும் மறையும்.....
நிழல் இரவு, பகல் உறவு 
எனும் உலக சுற்றில்....

வெள்ளி, 7 ஜனவரி, 2011

கரு-உரு

உரு பார்த்து கரு 
தொலைத்தேன்..
கரு பார்த்து கரு
வளர்த்தேன்..

கருவின் உருவத்தில் 
உருவில் கரு இல்லை 
உருவின் தோற்றத்தில் 
கருவின் கரு இல்லை.

கருவின் கண்ணே!
உருவானபின்,
புறக்கண்ணும் அறியுமோ!
அகக்கருவை..?!!   


கருவில் உரு இல்லை 
உருவில் கருவே எல்லை...

திங்கள், 3 ஜனவரி, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இன்றும் புதிதாய்
பிறந்து கொண்டிருக்கும் 
இவ்வுலகை புரிந்துகொள்ள 
உன் உள்ளத்தினை 
புதுப்பித்துக்கொள்,


உலகம் பெரியது அதன் 
உள்ளம் சிறியது.


உள்ளம் திறந்தால்
உலகமும் ஓர் நாள் 
சிறிதாக காணும் 
அன்பெனும் கடலில் 
சிறு தீவாய்....  




அனைவருக்கும் என் இனிய 
புத்தாண்டு வாழ்த்துக்கள்...