திங்கள், 21 செப்டம்பர், 2009

சில சிந்தனைகள்


கைவண்டி இழுப்பவனின்
ஏழ்மையை சொல்லிடும்
எலும்பு வரிகள்..

ஆற்றங்கரையில் சாயம்
வெளுக்கின்றான்
சாதிகள் எனும் சாயத்தை
வெளுக்கமுடியாமல்..

பருந்தின் பார்வைக்கு
தவறிய குஞ்சுகள்
எலும்பு குவியலாய்
குப்பை மேட்டில்...

விடுதலை கிடைத்தவுடன்
தற்கொலையா!!
முறைத்துக்கொண்டும்
நுரைத்துக்கொண்டும் பொங்கிய
மதுபானம் விழப்போவது கழிவறைக்குள்
என்பதால்!!!

மறைந்துவிட்ட ஒளியினை
அழுதுகொண்டே தேடிய
மெழுகுவர்த்தி..

பேதையாய்
பிறந்ததால் என்னவோ!
மடந்தையாகியும்
மணமாகாத முதிர்கன்னி..

மழை பொழிகிறது
மாசுகளின் சாயம் துடைத்திட,
மதம் பொழிகிறது
மனிதர்களுக்கு சாயம் பூசிட...

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

நவீனமாக்கப்பட்ட நகரம்

தொடர்வண்டி திட்டத்தால்
இடர்பட்ட மரங்கள்,
சிறகொடிந்தும் சிரிக்கின்றது
வண்ணம் மாற பூக்களுடன்.

ஆலயத்தை மிஞ்சும்
செல்லிடை கோபுரங்களின்
அலைவீச்சில் மரித்துவிட்ட
சிட்டுகளின் மெட்டுக்கள்.

வற்றிவிட்ட ஊரணியில் ஓர் அணியாய்
முளைத்துவிட்ட வீடுகள்.

ஆலைய நுரையீரல்களின்
புகை சுவாசத்தால்
மேக இமைகளில் அமில கண்ணீர்.

பிள்ளை வரம் வேண்டும் வீட்டில்
வாகன உறக்கத்திற்காக
வீழ்த்தப்பட்ட தென்னம்பிள்ளை.

தரை துளைப்பானின்
தொடர் தாக்குதலில்
எலும்புகள் உடைந்து பீரிட்ட
பூமித்தாயின் பச்சை ரத்தம்.

இயற்கையின் இசையெல்லாம்
ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு
ஒலிக்கின்றது இன்றைய மங்கையின்
செவிகளை அடைத்துக்கொண்டு.

இயற்கையின் முன் நவீனமாக்கப்பட்ட
நரகமாய்...