வெள்ளி, 4 டிசம்பர், 2009

ஓரடிக்கயிறுமாலையின் முற்பொழுதொன்று,
ஆயிரமாயிரம் சுக துக்க சமிக்கைகளை
தாங்கி நின்ற தந்தி கம்பமொன்றில்
பசுவும் இளம் கன்றும் ஒன்றாக
பிணைக்கப்பட்டிருந்தது ஓரடி கயிற்றினில்..

பசியுற்ற கன்று பசுவின் மடி தேட எத்தனித்தது, 
கயிற்றின் கருணைக்குறைவால் கழுத்தழுந்தியது.
கன்றுணர்ந்த பசுவும் மடி கொடுக்க முயன்று முயன்று   
தோற்றது பிடி கொடுக்காத கயிற்றின் முனையில்..

தந்திக்கம்பத்துக்கும்  பசுவுக்கும் இடையில் 
கயிறு வீணையிட்ட தந்தியாய் துடித்தது,
எங்கோ அழு குரல் கேட்டு விழிக்கின்றான் 
உண்டு களைத்த கறவைக்காரன்..

கறக்க வந்தவன் கட்டவிழ்க்கின்றான் 
கன்றுக்கு கண நேர அனுமதியுடன்..
கயிற்றில் புண்பட்ட பசு கன்றின் மெய்பட்டு 
சிலிர்த்து முத்தமிட்டது மொத்த ரணம் தீர்ந்ததாய்..
முட்டிக்குடித்த கன்று பிரிக்கப்பட்டது
கருணையின் நேரம் தீர்ந்ததாய்..

இனி மடியின் குருதி வரை 
கறக்கவிழைபவனை பார்க்கின்றது, 
நிசியில் வன்புணரும் கடைசிக்காமுகனுக்கு  
பொறுத்துக்கொண்டு கை இறுக்கும் தாசியைப்போல்...
(இது உரையாடல் சமுக கலை இலக்கிய அமைப்பு 
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)