சனி, 3 அக்டோபர், 2009

மூன்றாம்பிறை

நிலவு சொல்லும் வாழ்வினை என்

நினைவு சொல்லும் கவிதையாய் எழுதுகிறேன்!


ஆயிரம் நட்சத்திர பந்தங்களுடன்

ஓர் ஒளிக் கீற்றாய் பிறந்தேன்!

பிறையென பிறந்தேன்! மதங்களில்

நிறையென வளர்ந்தேன்!


புவியின் நிழலில் என்

நிஜங்களின் வளர்ச்சி கண்டேன்!

நாளொரு மேனியும் பொழுதொரு

வண்ணமாய் வளர்ந்தேன்.


புவியுலகில் நான் பெண்ணாய்

சித்தரிக்கப்பட்டேன்!

ஆயிரம் கவிதைகள் பிறந்தன,

ஆயிரம் மொழிகளில் பிறந்தன.


அன்று பௌர்ணமி - என்

வளர்ச்சியிலும் வாழ்விலும்

முழுமையடைகின்றேன்!

பெண்மையாய் பிறந்தேன்!


எனக்குள் ஓர் கர்வம்

இன்னுமொரு சூரியன் என!

அன்று நாணத்துடன் முழுமையாய்

எழுந்தேன்!


என் இளமையின் வாழ்க்கை

அன்று மட்டும்தான்!

நான் கண்ட காட்சிகளின் விசாலம்

பிறப்பின் பயனை அன்றுதான் அடைந்தேன்.


ஆர்பரிக்காத கடல்

வெண்மேக கூட்டங்கள்

வெள்ளிப் பனி மலைகள்

வானுயர்ந்த மரங்கள், மலைகள்

முகடுகள் எனப் புவியின் எழில் அனைத்தும் ரசித்தேன்!


ஆயிரம் மழலைகளுக்கு அன்னை

அமுதூட்டினாள் என் எழில் காட்டி,

எத்தனை கவிதையும் ஈடு செய்ய முடியாத

அந்த மழலை மொழிகள்..


இப்புவியில் நான் கண்ட

துயரங்கள் சிலவால் என் முகப்பொழிவிழந்தேன்!

இதற்கு நிலவு களங்கம் என பெயர் சூடினர்.


பெண்மையாய் பிறந்தேன்!

மழலை விழி பார்த்து

தாய்மையுடன் அந்தி மறைந்தேன்!

வீழும்போது என் இளமை தேய்வதை உணர்ந்தேன்!


பிறையாய் பிறந்து நான் கண்டதை,

பெற்றதை தேய்பிறையாய் இழந்து வந்தேன்!

இங்கு கீதையின் கூற்றை நினைவு கூர்கிறேன்!


இளமையின் பார்வையில் வந்ததை

முதுமையின் கோலத்திலும் காண்கிறேன்!

இங்கு நான் எடுத்து செல்லவுமில்லை

விட்டு செல்லவுமில்லை.


எங்கு பிறந்தேனோ! அங்கு

செல்வதை உணர்ந்தேன்!

தேய்ந்து தேய்ந்து

மீண்டும் கடைசி ஒளிக்கீற்றாய்

மூன்றாம் பிறை நிலை அடைந்தேன்!

அன்று விழும்போது மரணத்தின் வாசல் கண்டேன்.


அன்று அமாவாசை!

என் மரணம் கண்டு

கடல்கள் ஆர்பரித்தன!

ஆயிரம் நட்சத்திர பந்தங்களோடு

பிறந்த என் இழப்பை ஈடு செய்ய

முடியாமல் கோடி நட்சத்திரங்கள்

விழி பூத்து என்னை தேடின..


என் மரணம் ஓர் முடிவல்ல

மீண்டும் பிறையென பிறப்பேன்!

வாழ்வில் நிறையென சேர்ப்பேன்!

என் வாழ்வே மனித வாழ்வின் தத்துவம்..

புதன், 30 செப்டம்பர், 2009

ஜனனம்..முகிலின் மரணம்
மழையின் ஜனனம்,

விதையின் மரணம்
துளிரின் ஜனனம்,

பூக்களின் மரணம்
வாசனையின் ஜனனம்,ஞாயிறின் மரணம்
திங்களின் ஜனனம்.

இயற்கையின் எல்லா மரணங்களும் ஓர்
புனித ஜனனத்தை படைத்துவிட்டுதான் செல்கிறது.

மானிட பிறவியில் மட்டும் ஏன் மரணம்
ஓர் இறுதியாக மட்டுமே கணிக்கப்படுகிறது?மானிட பிறவியிலும் மரணத்தில் ஓர்
ஜனனம் இருக்கின்றது,

அதுதான்...

பெண்மையின் மரணம்
தாய்மையின் ஜனனம்...

திங்கள், 28 செப்டம்பர், 2009

விழியே!

ஒளியே!
நீ பிறந்தாய்
உலகம் விடிந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் விடிந்தது.

மொழியே!
நீ பிறந்தாய்
உலகம் பேசியது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் பேசியது.

காதலே!
நீ பிறந்தாய்
கனிவு பிறந்தது,


விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் துணிவு பிறந்தது.

அன்பே!
நீ பிறந்தாய்
உலகம் பணிந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் கனிந்தது.

ஜோதியே!
நீ பிறந்தாய்
பக்தி பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள்சக்தி பிறந்தது.

பெண்மையே!
நீ பிறந்தாய்
மென்மை பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் மேன்மை பிறந்தது.

உயிரே!
நீ பிறந்தாய்
ஜனனம் பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் நான் பிறந்துவிட்டேன்...