சனி, 24 அக்டோபர், 2009

சில சிந்தனைகள்


எல்லோரும் உன்னைப்போல்
இருக்கவேண்டும் என நீ நினைத்தால்
உன் அறிவுதான் இந்த
உலகத்தின் அறிவாக இருக்கும்..

உன்னை கடந்துவிட்ட துன்பங்களுக்கும்
உன்னால் நடந்துவிட்ட துன்பங்களுக்கும்
இடையே உள்ள வேறுபாட்டில்தான்
உன் வாழ்வின் இன்பக் கணக்கு எழுதப்படுகிறது..

சப்தங்களை நிறுத்தாதவரை
உன்னால் அமைதியை உணரமுடியாது,
எண்ணங்களை நிறுத்தாதவரை
உன்னால் தெளிவாக சிந்திக்கமுடியாது..

அறிவுக்கும் மனசுக்கும் சிக்கல்
இருக்கும்போது நீ மனசு சொல்வதை
மட்டும் கேள்! அறிவை கேட்காதே!
அறிவுக்கு அனைத்தையும் தெரியும்
மனசுக்கு உன்னை மட்டுமே தெரியும்.

நீ புரிந்துகொண்ட விசயங்களை
தெரிந்து கொள்ள நினைக்காதே!
நீ தெரிந்து கொண்ட விசயங்களை
புரிந்து கொள்ளாமல் இருக்காதே!

நல்லதை அறிந்துகொள்!
தீயதை தெரிந்துகொள்!

செவ்வாய், 20 அக்டோபர், 2009

மனமே


மனமே!
எப்படி இருக்கின்றாய் நீ?
பேதையின் கூட்டிலும் இருக்கின்றாய்,
பேரறிவாளன் கூட்டிலும் இருக்கின்றாய்.

பறிக்கவும் கொடுக்கவும்
இரு கைகள் போதவில்லை என
ஆயிரம் கரங்கள் கேட்கிறாய்!
அழகினை ஆராதிக்க
இரு விழிகள் போதவில்லை என
ஆயிரம் விழிகள் கேட்கிறாய்!

நிறைகின்றாய் குறைகின்றாய்
நிலவைப்போல் நியதியில்லாமல்..
நினைகின்றாய் நனைகின்றாய்
நித்தமோர் நிமித்தமாய்..

உடற்சிறைபட்ட மனமே!
உணர்ச்சி பெருக்கால்
உள்ளச்சிறையும் படுகிறாய்.

அவய துடிப்புகள் எல்லாம்
சமய துடிப்புகள்வரைதான்,
வார்த்தை ரணங்கள்
கணங்கள் கடந்தாலும்
மனங்கள் கடப்பதில்லை..

இறந்து இறந்து
பிறந்து வாழ்கிறாய்
மறந்துவிட மனமில்லாத மனமே!

புத்தி உறங்கி விழிக்கிறது
மனம் உறக்கத்திலும் விழிக்கிறது
கனவு விழி திறந்து..

சிதைக்குள்
சிறைப்பட்டு சிறைபட்டே
வதைபட்டு கொண்டிருக்கின்றாய்
உணர்வுகளின் பிடியில்
நிராயுதபாணியாய்...

மனமுவந்து பார்த்தால்
மனம் ஓர் குழந்தையே..