செவ்வாய், 20 அக்டோபர், 2009

மனமே


மனமே!
எப்படி இருக்கின்றாய் நீ?
பேதையின் கூட்டிலும் இருக்கின்றாய்,
பேரறிவாளன் கூட்டிலும் இருக்கின்றாய்.

பறிக்கவும் கொடுக்கவும்
இரு கைகள் போதவில்லை என
ஆயிரம் கரங்கள் கேட்கிறாய்!
அழகினை ஆராதிக்க
இரு விழிகள் போதவில்லை என
ஆயிரம் விழிகள் கேட்கிறாய்!

நிறைகின்றாய் குறைகின்றாய்
நிலவைப்போல் நியதியில்லாமல்..
நினைகின்றாய் நனைகின்றாய்
நித்தமோர் நிமித்தமாய்..

உடற்சிறைபட்ட மனமே!
உணர்ச்சி பெருக்கால்
உள்ளச்சிறையும் படுகிறாய்.

அவய துடிப்புகள் எல்லாம்
சமய துடிப்புகள்வரைதான்,
வார்த்தை ரணங்கள்
கணங்கள் கடந்தாலும்
மனங்கள் கடப்பதில்லை..

இறந்து இறந்து
பிறந்து வாழ்கிறாய்
மறந்துவிட மனமில்லாத மனமே!

புத்தி உறங்கி விழிக்கிறது
மனம் உறக்கத்திலும் விழிக்கிறது
கனவு விழி திறந்து..

சிதைக்குள்
சிறைப்பட்டு சிறைபட்டே
வதைபட்டு கொண்டிருக்கின்றாய்
உணர்வுகளின் பிடியில்
நிராயுதபாணியாய்...

மனமுவந்து பார்த்தால்
மனம் ஓர் குழந்தையே..

7 கருத்துகள்:

விஜய் சொன்னது…

நல்ல இருக்கு சங்கர்

விஜய்

சந்தான சங்கர் சொன்னது…

நன்றி விஜய்.

ஹேமா சொன்னது…

சங்கர்,எங்கள் சங்கடங்களையும் சந்தோஷங்களயும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்றமாதிரி உணர்வை வெளிப்படுத்தும் மனசு எங்களைவிடப் பாவம்தான் !

பா.ராஜாராம் சொன்னது…

நல்லா இருக்கு சங்கர்!

சந்தான சங்கர் சொன்னது…

ஹேமா
நன்றி ஹேமா
நிறைய வேலை
பின்னோட்டமிடவும் படிக்கவும்
நேரம் கிடைப்பதில்லை..

பா.ரா
வாங்க மக்கா
எப்பவாதும் வந்தாலும்
வந்ததே சந்தோசம்தான்.

ISR Selvakumar சொன்னது…

மனமுவந்து பார்த்தால்
மனம் ஓர் குழந்தையே.

நிறைவான வரிகள்!

divya சொன்னது…

nankal ninaikkum visayam ungal karpanaiyin karuvil ...super sankar sir..