சனி, 3 அக்டோபர், 2009

மூன்றாம்பிறை

நிலவு சொல்லும் வாழ்வினை என்

நினைவு சொல்லும் கவிதையாய் எழுதுகிறேன்!


ஆயிரம் நட்சத்திர பந்தங்களுடன்

ஓர் ஒளிக் கீற்றாய் பிறந்தேன்!

பிறையென பிறந்தேன்! மதங்களில்

நிறையென வளர்ந்தேன்!


புவியின் நிழலில் என்

நிஜங்களின் வளர்ச்சி கண்டேன்!

நாளொரு மேனியும் பொழுதொரு

வண்ணமாய் வளர்ந்தேன்.


புவியுலகில் நான் பெண்ணாய்

சித்தரிக்கப்பட்டேன்!

ஆயிரம் கவிதைகள் பிறந்தன,

ஆயிரம் மொழிகளில் பிறந்தன.


அன்று பௌர்ணமி - என்

வளர்ச்சியிலும் வாழ்விலும்

முழுமையடைகின்றேன்!

பெண்மையாய் பிறந்தேன்!


எனக்குள் ஓர் கர்வம்

இன்னுமொரு சூரியன் என!

அன்று நாணத்துடன் முழுமையாய்

எழுந்தேன்!


என் இளமையின் வாழ்க்கை

அன்று மட்டும்தான்!

நான் கண்ட காட்சிகளின் விசாலம்

பிறப்பின் பயனை அன்றுதான் அடைந்தேன்.


ஆர்பரிக்காத கடல்

வெண்மேக கூட்டங்கள்

வெள்ளிப் பனி மலைகள்

வானுயர்ந்த மரங்கள், மலைகள்

முகடுகள் எனப் புவியின் எழில் அனைத்தும் ரசித்தேன்!


ஆயிரம் மழலைகளுக்கு அன்னை

அமுதூட்டினாள் என் எழில் காட்டி,

எத்தனை கவிதையும் ஈடு செய்ய முடியாத

அந்த மழலை மொழிகள்..


இப்புவியில் நான் கண்ட

துயரங்கள் சிலவால் என் முகப்பொழிவிழந்தேன்!

இதற்கு நிலவு களங்கம் என பெயர் சூடினர்.


பெண்மையாய் பிறந்தேன்!

மழலை விழி பார்த்து

தாய்மையுடன் அந்தி மறைந்தேன்!

வீழும்போது என் இளமை தேய்வதை உணர்ந்தேன்!


பிறையாய் பிறந்து நான் கண்டதை,

பெற்றதை தேய்பிறையாய் இழந்து வந்தேன்!

இங்கு கீதையின் கூற்றை நினைவு கூர்கிறேன்!


இளமையின் பார்வையில் வந்ததை

முதுமையின் கோலத்திலும் காண்கிறேன்!

இங்கு நான் எடுத்து செல்லவுமில்லை

விட்டு செல்லவுமில்லை.


எங்கு பிறந்தேனோ! அங்கு

செல்வதை உணர்ந்தேன்!

தேய்ந்து தேய்ந்து

மீண்டும் கடைசி ஒளிக்கீற்றாய்

மூன்றாம் பிறை நிலை அடைந்தேன்!

அன்று விழும்போது மரணத்தின் வாசல் கண்டேன்.


அன்று அமாவாசை!

என் மரணம் கண்டு

கடல்கள் ஆர்பரித்தன!

ஆயிரம் நட்சத்திர பந்தங்களோடு

பிறந்த என் இழப்பை ஈடு செய்ய

முடியாமல் கோடி நட்சத்திரங்கள்

விழி பூத்து என்னை தேடின..


என் மரணம் ஓர் முடிவல்ல

மீண்டும் பிறையென பிறப்பேன்!

வாழ்வில் நிறையென சேர்ப்பேன்!

என் வாழ்வே மனித வாழ்வின் தத்துவம்..

6 கருத்துகள்:

விஜய் சொன்னது…

இனி மூன்றாம் பிறை காணும்போதெல்லாம் சங்கர் தெரிவார். வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் சொன்னது…

ஆயிரம் மழலைகளுக்கு அன்னை
அமுதூட்டினாள் என் எழில் காட்டி,
எத்தனை கவிதையும் ஈடு செய்ய முடியாத
அந்த மழலை மொழிகள்..

அழகா சொல்லி இருக்கீங்க சங்கர்
************************************

Thenammai Lakshmanan சொன்னது…

மூன்றாம் பிறை, ஜனனம் எல்லாமே அருமை
சந்தான சங்கர் //பிறையாய் வாழ்வது //என்பது நல்லா இருக்கு

சந்தான சங்கர் சொன்னது…

விஜய்
பிறை பார்த்து
நிறை சேர்த்ததுக்கு
நன்றி.

நவாஸ்
உங்கள் முதல் வருகைக்கும்
முதல் ஊக்கத்திற்கும்
அன்பு கலந்த நன்றி..

தேனம்மை
ஆகாய விமானத்தில் இருந்து
இறங்கி வந்து வாழ்த்தியமைக்கு
நன்றி..

ஹேமா சொன்னது…

வானத்து ராணியையும் பூமியில் இருந்து வர்ணிக்க ஒரு கவிஞன்.
மூன்றம் பிறையாய் ,முழு நிலவாய், மீண்டும் தேய்ந்த இருளை அமாவாசையாய்.அழகுதான் சங்கர்.

இரசிகை சொன்னது…

azhagu nila...:)