புதன், 30 செப்டம்பர், 2009

ஜனனம்..



முகிலின் மரணம்
மழையின் ஜனனம்,

விதையின் மரணம்
துளிரின் ஜனனம்,

பூக்களின் மரணம்
வாசனையின் ஜனனம்,



ஞாயிறின் மரணம்
திங்களின் ஜனனம்.

இயற்கையின் எல்லா மரணங்களும் ஓர்
புனித ஜனனத்தை படைத்துவிட்டுதான் செல்கிறது.

மானிட பிறவியில் மட்டும் ஏன் மரணம்
ஓர் இறுதியாக மட்டுமே கணிக்கப்படுகிறது?



மானிட பிறவியிலும் மரணத்தில் ஓர்
ஜனனம் இருக்கின்றது,

அதுதான்...

பெண்மையின் மரணம்
தாய்மையின் ஜனனம்...

திங்கள், 28 செப்டம்பர், 2009

விழியே!

ஒளியே!
நீ பிறந்தாய்
உலகம் விடிந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் விடிந்தது.

மொழியே!
நீ பிறந்தாய்
உலகம் பேசியது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் பேசியது.

காதலே!
நீ பிறந்தாய்
கனிவு பிறந்தது,


விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் துணிவு பிறந்தது.

அன்பே!
நீ பிறந்தாய்
உலகம் பணிந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என் உள்ளம் கனிந்தது.

ஜோதியே!
நீ பிறந்தாய்
பக்தி பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள்சக்தி பிறந்தது.

பெண்மையே!
நீ பிறந்தாய்
மென்மை பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் மேன்மை பிறந்தது.

உயிரே!
நீ பிறந்தாய்
ஜனனம் பிறந்தது,

விழியே!
நீ பிறந்தாய்
என்னுள் நான் பிறந்துவிட்டேன்...

திங்கள், 21 செப்டம்பர், 2009

சில சிந்தனைகள்


கைவண்டி இழுப்பவனின்
ஏழ்மையை சொல்லிடும்
எலும்பு வரிகள்..

ஆற்றங்கரையில் சாயம்
வெளுக்கின்றான்
சாதிகள் எனும் சாயத்தை
வெளுக்கமுடியாமல்..

பருந்தின் பார்வைக்கு
தவறிய குஞ்சுகள்
எலும்பு குவியலாய்
குப்பை மேட்டில்...

விடுதலை கிடைத்தவுடன்
தற்கொலையா!!
முறைத்துக்கொண்டும்
நுரைத்துக்கொண்டும் பொங்கிய
மதுபானம் விழப்போவது கழிவறைக்குள்
என்பதால்!!!

மறைந்துவிட்ட ஒளியினை
அழுதுகொண்டே தேடிய
மெழுகுவர்த்தி..

பேதையாய்
பிறந்ததால் என்னவோ!
மடந்தையாகியும்
மணமாகாத முதிர்கன்னி..

மழை பொழிகிறது
மாசுகளின் சாயம் துடைத்திட,
மதம் பொழிகிறது
மனிதர்களுக்கு சாயம் பூசிட...

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

நவீனமாக்கப்பட்ட நகரம்

தொடர்வண்டி திட்டத்தால்
இடர்பட்ட மரங்கள்,
சிறகொடிந்தும் சிரிக்கின்றது
வண்ணம் மாற பூக்களுடன்.

ஆலயத்தை மிஞ்சும்
செல்லிடை கோபுரங்களின்
அலைவீச்சில் மரித்துவிட்ட
சிட்டுகளின் மெட்டுக்கள்.

வற்றிவிட்ட ஊரணியில் ஓர் அணியாய்
முளைத்துவிட்ட வீடுகள்.

ஆலைய நுரையீரல்களின்
புகை சுவாசத்தால்
மேக இமைகளில் அமில கண்ணீர்.

பிள்ளை வரம் வேண்டும் வீட்டில்
வாகன உறக்கத்திற்காக
வீழ்த்தப்பட்ட தென்னம்பிள்ளை.

தரை துளைப்பானின்
தொடர் தாக்குதலில்
எலும்புகள் உடைந்து பீரிட்ட
பூமித்தாயின் பச்சை ரத்தம்.

இயற்கையின் இசையெல்லாம்
ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு
ஒலிக்கின்றது இன்றைய மங்கையின்
செவிகளை அடைத்துக்கொண்டு.

இயற்கையின் முன் நவீனமாக்கப்பட்ட
நரகமாய்...

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

சில வரிகள்..


நிழலை கண்டு
நிஜமாய் உருகாதே!
காட்சி பொருளெல்லாம் காணலே!
புற தோற்றம் புதுமைதான் அதில்
அகம் உருகுவது அர்த்தமற்றது.

செவ்வண்ண அந்தியே!
ஏனிந்த கோபம்?
வானில் முகிலின்றி
மகிழ முடியவில்லையா?

இரவின் விதவைக்கு
குங்கும பொட்டாய் வாழ்வு
தந்த காலை கதிரே!
உன்னொளி பட்டுவிட்டால்
எல்லாம் மங்கலமே!

இரவுகள் என்றும் நிரந்திரமாவை,
உறவுகள் எல்லாம் சிறு வெளிச்சம்களே!
தன் பங்கிற்கு எரிந்து விட்டு செல்லும்.
உன்னுள் நீ ஒளிர்ந்தால் மட்டுமே
வாழ்வு வெளிச்சமாய் அமையும்..



புதன், 16 செப்டம்பர், 2009

பொய்


உலகில் பொய் என்பது
எதுவும் இல்லை,
சொல்வது பொய் என்றால்
சொல்பவன் மெய்யே!
கானல் பொய் என்றால்
காண்பது மெய்யே!
வாழ்வது பொய் என்றால்
வாழ்க்கை மெய்யே!
வெளிச்சம் யார் மீது பட்டாலும்
நிழல் விழுவது போல்
உண்மையின் நிழல்தான் பொய்.
நிழலான பொய் எல்லாம்
நிஜமாய் நிலைப்பதில்லை,
சில உண்மைகளை மறைக்கும்
நிழல்கள்தான் அவை!
அஸ்தமனத்தில் உண்மை மட்டுமே
விளக்கேற்றும்...

திங்கள், 14 செப்டம்பர், 2009

ஒளிர்ந்திடு!


உடலென்ற அகழுக்கு
உள்ளமென்ற திரியிட்டு
உணர்வென்ற எண்ணையிட்டு
வாழ்வென்ற ஜோதி ஏற்றி
அன்பென்ற ஒளியாய்
ஒளிர்ந்திடு...