வெள்ளி, 25 டிசம்பர், 2009

சிந்தனை துளிகள்..3


நேற்றைய அனுபவம்,
இன்றைய சிந்தனை!
இன்றைய சிந்தனை, 
நாளைய வழிகாட்டி!
நாளைய வழிகாட்டி, 
இன்றைய தத்துவம்..

தெய்வ நம்பிக்கை என்பது 
உன் உடலில் இருக்கும் 
குருதி போன்றது,
ஒவ்வொரு துளி சிந்தும்பொழுதும் 
உன் இறை நம்பிக்கையை 
நினைவுபடுத்திக் கொள்கிறாய்.

நீ கடந்து சென்ற பாதையில்தான் 
நீ மறந்து சென்ற வழிகள் இருக்கும் 
நீ மறந்து சென்ற வழிகளில்தான் 
நீ கடந்துவிட்ட வாழ்வு  இருக்கும்..

மண்ணில் இருக்கும்
இரும்பு துகள்களுக்குகூட ஒரு 
காந்தபுலன் கிடைத்துவிட்டால் 
எழுந்துவிடுகிறது,
நீயும் உன் திறமைகளுக்கான 
புலனில் எழாவிட்டால்...
உன் திறமைகளும் மண்ணில் 
மறைந்த துகள்களே..!

 

சனி, 12 டிசம்பர், 2009

சகவாச சேறு


நத்தையிட்ட ஈரம்போல்
நகர்ந்துகொண்டிருந்த பின்னிரவு,

அரவமற்ற அறையினில்
அழுதுகொண்டே தீர்ந்துகொண்டிருந்த 
மெழுகுவர்த்தியாய் அவள்..

மது நீர்த்து மாது தீர்த்திட 
கூலி கொடுக்கிறது மாமிச பட்சி,
பட்சியாய் நுழைந்ததெல்லாம்
பச்சையாய்.....!

வீணையவள் மீட்டப்படுகிறாள் 
ஈன ஸ்வரங்களாய்..
மீட்கப்பட முடியாமல்...
தந்தியறுத்து தந்தியறுத்து
பிணைக்கப்படுகிறாள் மீண்டும் 
பந்தி படைக்க.. 

என்றோ பூக்களைகூட பாரமென 
வீசியவள் தலைக்கனம் 
சகவாச சேற்றினில் விழுந்து 
புரளமுடியாமல் புலம்புகிறது..

நாதியறுத்து வந்தவளின் 
நாடியறுக்கும் உலகினில்..

வெள்ளி, 4 டிசம்பர், 2009

ஓரடிக்கயிறு



மாலையின் முற்பொழுதொன்று,
ஆயிரமாயிரம் சுக துக்க சமிக்கைகளை
தாங்கி நின்ற தந்தி கம்பமொன்றில்
பசுவும் இளம் கன்றும் ஒன்றாக
பிணைக்கப்பட்டிருந்தது ஓரடி கயிற்றினில்..

பசியுற்ற கன்று பசுவின் மடி தேட எத்தனித்தது, 
கயிற்றின் கருணைக்குறைவால் கழுத்தழுந்தியது.
கன்றுணர்ந்த பசுவும் மடி கொடுக்க முயன்று முயன்று   
தோற்றது பிடி கொடுக்காத கயிற்றின் முனையில்..

தந்திக்கம்பத்துக்கும்  பசுவுக்கும் இடையில் 
கயிறு வீணையிட்ட தந்தியாய் துடித்தது,
எங்கோ அழு குரல் கேட்டு விழிக்கின்றான் 
உண்டு களைத்த கறவைக்காரன்..

கறக்க வந்தவன் கட்டவிழ்க்கின்றான் 
கன்றுக்கு கண நேர அனுமதியுடன்..
கயிற்றில் புண்பட்ட பசு கன்றின் மெய்பட்டு 
சிலிர்த்து முத்தமிட்டது மொத்த ரணம் தீர்ந்ததாய்..
முட்டிக்குடித்த கன்று பிரிக்கப்பட்டது
கருணையின் நேரம் தீர்ந்ததாய்..

இனி மடியின் குருதி வரை 
கறக்கவிழைபவனை பார்க்கின்றது, 
நிசியில் வன்புணரும் கடைசிக்காமுகனுக்கு  
பொறுத்துக்கொண்டு கை இறுக்கும் தாசியைப்போல்...




(இது உரையாடல் சமுக கலை இலக்கிய அமைப்பு 
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)

வியாழன், 26 நவம்பர், 2009

பசி


மாரில் தங்கமறுத்த பாலுக்கு
விழைந்து வீறிட்ட குழந்தையை
இடுப்பில் தக்க வைத்து
இறைஞ்சுகிறாள்...
இரக்கமற்றவனின் வாகன யன்னலும்
இறங்க மறுக்கின்றது..
சிவப்பு விளக்கு நிறுத்தத்தில் 
பச்சிளம் தளிரின் பசி நிறுத்தமுடியாமல்..

யாசித்தவனுக்கு 
யோசித்து சட்டைப்பை தடவி 
தொட்டு விழுந்த ஒற்றை காசில் 
திறந்தது பசியடைத்த செவிகள்..

விருந்தொன்றில் 
பசியற்றவன் புசித்த மிச்சம் 
நிரப்புகின்றது குப்பைத்தொட்டியின் 
வயிற்றினை..

யாக்கையின்
முதல் வேட்கை 
தணிய துணிந்த 
பிச்சையாய்... 

வெள்ளி, 20 நவம்பர், 2009

கண்ணாடி முன்



கண்ணாடி முன்
கவிதையாய்
நான்..
கவிதையின்
அர்த்தமாய்
என்றும் நீ..

இதயத்தில்
உன்னை
தேடினேன்...
என்னை
தொலைத்துவிட்டு..

பெரிதான 
அன்பின் முன் 
சிறிதாகிபோன
உயிர்...
சிறிதான 
உயிரிலும் 
பெரிதாக 
கலந்தது 
உன் அன்பு..

நீயும்
நானும்
பற்றிக்கொள்ள
பற்றிக்கொண்டது
காதல்
நெருப்பு..

சனி, 14 நவம்பர், 2009

சிந்தனை துளிகள்



மௌனம் சம்மதத்திற்கு பொருந்தும்
சங்கடங்களுக்கு பொருந்தாது
சங்கடத்தின் மௌனம் உன்னை
சப்தமாக கொன்றுவிடும்.

தியாகத்தில் திரியாய்
தீபத்தின் ஒளியாய் நீ
பிரகாசித்தாலும் நம்பிக்கை எனும்
எண்ணை இல்லாவிடில் உன்னால்
நிரந்திரமாய் பிரகாசிக்க முடியாது.

ஒரு பொய்க்கு உண்மையான
காரணம் இருக்கும்,
ஒரு உண்மைக்கு பொய்யான 
காரணம் இருக்கமுடியாது.

காலம் கடந்த ஞானம் 
முற்றுபெறுவதில்லை 
காலங்களை கடந்த ஞானம் 
விட்டுப்பிரிவதில்லை.

உலகை வெளிச்சமாக்கிய சூரியனால் 
உன்னை வெளிச்சமாக்க முடியாது 
உன்னில் நீ பிரகாசித்துவிட்டால் 
உன்னாலும் இவ்வுலகை 
பிரகாசிக்க வைக்க முடியும்.

அன்பை எடுப்பவன் ஆயுதத்தைவிட 
கூர்மையானவன்,
ஆயுதத்தை எடுப்பவன் அன்பினால் 
கூர்மையாக்கப்படாதவன். 

செவ்வாய், 10 நவம்பர், 2009

தொடர்பதிவு

அன்பு நண்பர் விஜய்க்காக....




1.A- Available/single - single but not reachable
                                      searching for a kind...

2.B- Best Friend - நிறைய நண்பர்கள் பட்டியலிட்டு
                               பார்க்கவேண்டுமா?

3 C - Cake or pie - இரண்டுமில்லை


4 D - Drink of choice - காபி (bru


5 E - Essential items you use everyday - My bike Suzuki Access125


6 F - Favorite Colour - ரோஸ்


7 G - Gummy bears or worms - இரண்டும் இல்லை


8 H - Hometown - கரூர்


9 I - Indulgence - வலைத்தளம்


10 J - January or February - போகி,


11 K - Kids and their names - இன்னும் மணமாகவில்லை


12 L - Life is incomplete without - ரசனை


13 M - Marriage date - சொல்லப்படாத கவிதை


14 N - Number of siblings - 1 அக்கா உஷா


15 O - Oranges / Apples - ஆப்பிள்


16 P - Phobias / Fears - இயற்கை அழிவுகள்


17 Q - Quotes for today - silence is the sound of soul
                                           violence is the mute of soul

18 R - Reason to smile - மழலைகள்


19 S - Season - குளிர்காலம்


20 T - Tag 4 people - எல்லோரும் ஒரு ரவுண்டு வந்துட்டாங்க.


21 U - Unknown fact about me - மூன்று வருடங்களுக்கு முன் மூன்றாம்பிறை கவிதை தொகுப்பு வெளியிட்டது. 


22 V - Vegitable you dont like - அப்படி எதுவும் இல்லை.

23 W - Worst habbit - வெளுத்ததெல்லாம் பால்


24 X - Xrays you had - வலது கையில்


25 Y - Your favorite food - இட்லி பூண்டு சட்னி (காரமா)


26 Z - Zodiac sign - மீனம்




அன்பிற்குரியவர்கள் - அனைத்து நட்பும்


ஆசைக்குரியவர்கள் - எதிர்பார்ப்பின் விளிம்பில்


இலவசமாய் கிடைப்பது - மழை, மழலை மொழிகள்.


ஈதலில் சிறந்தது - அன்பான பசியாற்றல்


உலகத்தில் பயப்படுவது - உலக வெப்பமடைதல்


ஊமை கண்ட கனவு - சொல்ல தெரியவில்லை.


எப்போதும் உடன் இருப்பது - Nokia 6021


ஏன் இந்த பதிவு - நட்புக்காக


ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - தக்க சமயத்தில் உதவுவது


ஒரு ரகசியம் - அன்பைவிட கூர்மையான ஆயுதம் இல்லை


ஓசையில் பிடித்தது - புல்லாங்குழல்


ஔவை மொழி ஒன்று - ஆறுவது சினம்







நன்றிகள் பல என் வலை நண்பர்களுக்கு...