வெள்ளி, 27 மே, 2011

அன்பே...


இரவையும் பகலையும் நிரந்திரமாய் 
கிடைக்கப்பெற்ற உலகமிது,
பகலை இருட்டிப்பு செய்யவும் 
இருளை வெளிச்சமாக்கவும்  
துடிக்கும் மனித முயற்சிகள்..

மழலை என்பது அதிகாலை 
முதுமை என்பது அந்தி,
மிகிந்து குறையும் 
வளர்ந்து தேயும் உலக வாழ்வில் 
நிரந்திரம் எதுவுமில்லை.

அன்பையும் பசியையும் 
இழந்த மனிதன்தான் 
பண்பையும் பரிவையும் மீறுகின்றான்

சுயம் சுற்றும் உலகில் 
சுயம் பெற்றவன் மனிதனே!
மனிதனின் மகத்துவம் மறைக்கும் 
மனித கொள்கையில் பிறந்த கடவுள்.

கண்டு  கொள்ளமுடியாத அன்பில்   
காணாமல் கிடைத்ததாம் பக்தி.
கடவுள் என்பது சுய நம்பிக்கைக்கு 
வைக்கப்படும் ஓர் புள்ளியே!
கடந்தவன் தெய்வமாகிறான் 
கடக்காதவன் தெய்வம் படைக்கின்றான்,

அறிவு என்பது ,
முன்னால் படைக்கப்பெறுவதில்லை
உன்னால் கிடைக்கப் பெறுவதே!

அன்பு என்பது, 
படைத்து  பெறுவதல்ல 
கிடைத்து பெறுவதே!
கிடைக்காமல் பெற முயற்சிக்கும் 
எண்ணம் கடவுள்..
கிடைத்தும் கொடுக்க மறுக்கும் 
நிலை மனிதன்.

இருப்பதை கொடுக்க (அன்பு) மறுப்பதில்தான் 
இல்லாததில் நம்பிக்கை (கடவுள்) பிறக்கின்றது.

உலகம் ஒன்றுபட, 
அன்பை தேட முயலாதிர்கள், 
அன்பை கொடுக்க முயலுங்கள்.

அன்பிற் சிறந்த கடவுளுமில்லை 
உன்னில் பிறக்காத அன்புமில்லை..


திங்கள், 23 மே, 2011

நீ ஒன்றே!



நினைவுகளை திருத்தி பார்க்கின்றேன்
அதன் நிழல்கள் மாறவில்லை,
உலகமே உயிர் பெற்றிருந்தாலும்
அகம் தேடும் உயிர் நீயல்லவா!

கேள்விகளுக்காகவே காத்திருக்கும் 
பதில்போல் உன் 
அய்யங்களுக்காகவே என் மெய் 
விழித்திருக்கின்றது.

அறிந்தவளின் அறியாமையில் 
அறிந்து கொள்ளும் அதிசயங்கள்  பல,

புரிந்தவளுக்கு புதிதாய் 
எத்தனை வருடங்கள் பிறந்தாலும்
உன் அன்பின் இளமை படிக்க 
வயதில்லையடி எனக்கு.. 

உலகம் ஒன்றல்ல..
உணர்வில் நீ ஒன்றே..







வியாழன், 14 ஏப்ரல், 2011

தமிழ் பூ



சாய்ந்து சுற்றும் உலகினில் 
நிமிர்ந்தெழும் நிதர்சனம் நீயடி, 
பருவ மங்கையின் சிரிப்பாய், சிலிர்ப்பாய் 
சப்தங்களையும் சந்தங்களையும் 
பிணைத்து பிரசவிக்கும் தமிழ்த்தாய்! 

ஒற்றை குழல் ஓசையாய்,
நாவிக் கமல நாதமாய்,
விண்ணதிரும் முரசுகளாய்,  
உலகெங்கும் விரிந்தாய் 
உணர்வெங்கும் பதிந்தாய்.

அழகை சொல்ல வந்த அழகே!
உன்னை பழகச் செய்ததென் பாக்கியமல்லவா!
இணை பிரியாமல் துணை  புரியும் உன்
அணை பிரிய மறுதலிக்குமடி மனது.

எத்தனை மெல்லிய அன்புகளால் 
என்னவளின் இதயம் திருட செய்தாய்,
அவளை கண்டு உன்னை உணர்ந்தேன் 
உன்னை கொண்டு அவளிதயமடைந்தேன்..

மொழிகளுக்கெல்லாம் மேல் நின்று 
வழி சொல்லும் உன் அகரமும் லகரமும் 
சிகரம் தொட்டதென்றால் மிகையாகாது 
என் தமிழே!

அனைவருக்கும் என் இனிய 
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  

புதன், 9 மார்ச், 2011

பெண்மையே!


பெண்மையே!

உன்னை புரிந்து புரிந்து 
பிரிகிறேன் பிரியமுடியாமல்,
உயிர் கொடுத்து உயிர் எடுக்கும்
உன் பிரம்மம் ஓர் சூத்திரமே..

அணையக் கிடைத்ததில் எல்லாம் 
அடை காக்கவில்லை,
இணையக் கிடைத்ததில் விடை தராமல் 
விடை பெரும் அம்புகளாய் எத்தனை கோடி..

உடலும் கடலென மூழ்கிய முத்துக்களில் 
என்னை மட்டும் தத்தெடுக்கும் அன்னை சிற்பியே!


தன்னை அறியா தளிரும் உன்னை அறியும்..
என்னை அறிந்து புரியக் கிடைத்த பிரியம் 
உலகில் நீயல்லவா பெண்மையே!..   

சனி, 26 பிப்ரவரி, 2011

அகயுகம்



அகம் தர மறுத்த 
ஞானம் எதுவுமில்லை,

யுகம் எங்கும்  பிறர் பொருள் 
தேடாதவரை.

உன்னில் மூழ்க 
கிடைக்கும் முத்து 
ஆழியிலும் கிடைத்திடாது..

அன்பை சொல்ல 
ஞானம் தேவை இல்லை ..

ஞானத்தின் அன்பில் 
அன்பை தவிர வேறெதுவுமில்லை.

இரு மெய் புணர் உலகில் 
பொய்யென யாரும் பிறப்பதில்லை.


தன்னை சுற்றும் 
உலகம் மாறவில்லை 


உன்னை சுற்றும் 
உலகில் உன்னில் 
சற்றும் உணராதிருந்தால்..
என்ன சுற்றி பயன் அதற்கு..


யுகத்தின் பொருள் அகம் 
அகத்தின் பொருள் யுகம் 


யுகத்தில் நீயென 
கிடைக்கப்பெறுவதை விட 
யுகமே நீயனே உணர்ந்திடு
அகமே.......



   




திங்கள், 14 பிப்ரவரி, 2011

அன்பில் மட்டும் அர்த்தமாகி..



உன்னை விழிக்க செய்து 
உறங்கி போகும் நினைவுகள்.. 


காலத்தின் கணிசமான 
இழப்புகளையும் ஈடு செய்ய 
துடிக்கும் அலைபேசி பரிமாற்றங்கள்..


நிஜங்களில் திளைந்து 
நினைவுகளை சுமந்து 
கனவுகளை கரை சேர்க்க 
துடிக்கும் இந்த புனித பயணம்.


வாழ்வின் மாற்றங்களில் 
மாற்றம் தராத உன் நேசம்..


துடித்து செல்லும் காலத்திலும் 
அடித்து செல்லாத உன் அன்பு..


அடுத்து சொல்ல வார்த்தை இல்லை 
அன்பில் மட்டும் அர்த்தமாகி போகிறேன்.. 


சனி, 5 பிப்ரவரி, 2011

உலகத்தில் நீ

இன்னமும் எண்ணமுடியாத  நட்சத்திரங்களின் முன் 
எண்ண முடியும் 
எண்ணமற்ற மனிதர்களாய் நாம்..


மனம் கொல்லும் மனிதன்தான் 
மனிதர்களை கொல்ல முடியும். 


தினம் படைத்த பூமியும் 
கணம் மாறவில்லை,


மனம் கிடைத்த மனிதனே!
கணமெல்லாம் ரணம் செய்து 
யுகம் வளர்த்திடும் உன் 
முகமும் அகமும் மறையும்.....
நிழல் இரவு, பகல் உறவு 
எனும் உலக சுற்றில்....

வெள்ளி, 7 ஜனவரி, 2011

கரு-உரு

உரு பார்த்து கரு 
தொலைத்தேன்..
கரு பார்த்து கரு
வளர்த்தேன்..

கருவின் உருவத்தில் 
உருவில் கரு இல்லை 
உருவின் தோற்றத்தில் 
கருவின் கரு இல்லை.

கருவின் கண்ணே!
உருவானபின்,
புறக்கண்ணும் அறியுமோ!
அகக்கருவை..?!!   


கருவில் உரு இல்லை 
உருவில் கருவே எல்லை...

திங்கள், 3 ஜனவரி, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இன்றும் புதிதாய்
பிறந்து கொண்டிருக்கும் 
இவ்வுலகை புரிந்துகொள்ள 
உன் உள்ளத்தினை 
புதுப்பித்துக்கொள்,


உலகம் பெரியது அதன் 
உள்ளம் சிறியது.


உள்ளம் திறந்தால்
உலகமும் ஓர் நாள் 
சிறிதாக காணும் 
அன்பெனும் கடலில் 
சிறு தீவாய்....  




அனைவருக்கும் என் இனிய 
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புதன், 14 ஏப்ரல், 2010

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

கரத்தை


தியில் 


ணைத்து 


ன்றது 


ந்தன் 


டகம், 


ங்களின்


ற்றமாய்.. 


ந்தினையும் 


ன்றுபட்டு 


ங்கிடும் 


வியம் கொள்ளாத


கம் நீயல்லவா..






எங்கள் தமிழே... 




அனைவருக்கும்


என் இனிய 


தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

திங்கள், 8 மார்ச், 2010

பெண்கள் தினம்.

இறப்பெனும் நிலை சென்று
பிறப்பினை கொடுக்கும் 
பெண்மையே!
உன் நினைவுகள் என்றும் 
இறப்பதில்லை இவ்வுலகினில்...



வலை உலக சகோதரிகளுக்கும் 
தோழிகளுக்கும் என் இனிய பெண்கள் தின 
வாழ்த்துக்கள்..

சனி, 6 பிப்ரவரி, 2010

காகிதங்களின் கைகளில்...


இன்னமும் கரைந்து கொண்டிருக்கின்றேன்
கணங்களைப்போல்,
கடமையின் கால் விலங்கு அறுந்து
நடை பழகும் குழந்தையாய் நான்.
வருடங்கள் மட்டும் இலையுதிர் காலமென
என் இளமை உதிர்த்து செல்கிறது.
துணை தேட விழைந்த பயணம்
தூசி தட்டி திறக்கும் ஜாதக பக்கங்கள்.
பன்னிரு கட்டங்களில் மட்டுமே
பயணிக்கும் மண வாழ்க்கை.
பிறந்த கணங்களிலேயே அன்பை உணர்ந்தும்
பகிர கிடைக்காத நிலை.
அவளால் மட்டுமே உணரக்கூடிய அன்பு
அச்சு பதிக்கும் காகிதங்களின் கைகளில்...
.
.
.

புதன், 20 ஜனவரி, 2010

மருத்துவன்


இப்படியும் அப்படியும்
ஆட்டுவிக்கிறான்
எப்படிப்பட்ட மனிதர்களையும்,

கத்திமுன் பணியவைக்கிறான்
புத்திகொண்ட புருஷர்களையும்.
எப்பவாது காயப்படுத்தியும்
விடுகிறான்.

இத்தனையும் செய்துவிட்டு
ரசம் சூழ்ந்த கண்ணாடி முன்
நம்மை ஒப்பனை கவிதையும்
ஆக்கிவிடுகிறான் அரையடி
கத்திகொண்டு..


(நன்றி பா.ரா )

புதன், 13 ஜனவரி, 2010

தைத்திருநாள்


போகி

செந்தூரமிட்டது அந்தி வானம், 
தாவாரம் தொட்டது ஆவாரப்பூக்கள்.
தேவாரம் பாடியது மங்கள இசை 
ஆராவாரமிட்ட சிறு பெண்டிர், 
ரீங்காரமிட்டது மாலை வண்டுகள். 
மூவடிகம்பினில் தீமூட்டி சுவைத்த
முக்கண் சூரண தேங்காய்,
பழையன பற்றி எரிந்தது போகியில்
புதிய ஜோதியாய்..

'தை'த்திருநாள் 

வானத் தை வளைக்கும் வானவில் 
நாணத் தை விளைக்கும் பூவைகள் 
கானத்  தை இசைத்திடும் பாடல்கள் 
புருவத் தை உயர்த்திடும் வீர விளையாட்டுக்கள் 
பருவத் தை அடைந்திடும் விடலைப் பெண்கள் 
கோலத் தை  ஏற்றிடும் புதிய வாசல் 
காலத் தை வென்றிடும் 
இத் தை திருநாள்..

மாட்டுப்பொங்கல் 

"சேற்றிலே" உன் கால் வைக்கும் முன் 
தன் கால் வைத்து உழைத்த காளைக்கும்
"வீட்டிலே" தாய்ப்பால் சுரக்கும் முன் 
தன் பால் தந்து காத்திடும் பசுவிற்கும்
 நன்றிகள் ஆயிரம் சொல்வோம் 
மாட்டுப் பொங்கல் திருநாளிலே..

காணும்பொங்கல் 

உழவுக்கு வந்தனமிட்டோம் 
உறவுக்கு சந்தனமிட்டோம் 
பசுவுக்கு படையலிட்டோம்
பாசத்தின் உணர்விலிட்டோம்.

ஊரெல்லாம் பொங்கலிட்டது 
உணர்வெல்லாம் பொங்கிவிட்டது 
உழைத்திட்ட உள்ளங்களே!
களைத்திட்ட சோர்வுநீங்க
ஊரெல்லாம் கூடிடுவோம் 
உளமார பாடிடுவோம் 
இக்'காணும்' பொங்கலிலே...  


அனைவருக்கும் இனிய 'தை' திருநாள் 
பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..    

புதன், 6 ஜனவரி, 2010

ஒரு பிடி காற்றுக் கோளம்




ஆரோகணமும் அவரோகணமும்
புணர்ந்துகொண்டிருந்தது,
ஆழியொத்த தாழி ஒன்றில்,
கத்திப்புற்கள் கண்ணீர் நிரப்ப
சபிக்கப்பட்டிருந்தது..

அரவமொத்த பாத தீண்டல்கள்
சாகா வரம்பெற்று உருண்டுகொண்டிருந்தது
பூகோள பந்தொன்று..

ஆயிரம் சூரிய பார்வை ஒற்றை வட்டத்திற்குள்
எட்டுத்திக்கும் நிழல் விம்மம்..

பச்சை பாய் கிடத்தி காலனிட்ட
உந்துதலில் ஓலமிட்டும்  மரிக்கக் கடவாத
ஒரு பிடி காற்றுக்  கோளம்...

(நன்றி நேசமித்திரன்)

வெள்ளி, 1 ஜனவரி, 2010

நகல்


ஒரு போக்குவரத்து சாலை நிறுத்தத்தில்
நம் வலையுலக ஜாம்பவான்களின் வரிகள்
எப்படி இருக்குமென்று ஒரு சிறு கற்பனை..

 
நேசமித்திரன்


மேகம் புணர்ந்த துளிகளில் அழுக்ககற்றி குளித்தது  
சேன்றோவின் வைபர் கைகள்,
மரித்துக்கொண்டிருந்த சிகப்பு வினாடிகளில்
கசிந்துகொண்டிருந்தது சைலன்சர் சுருட்டு.

மெர்சிடிசின் யன்னலில் நிழல் முகம்
ஒப்பனை செய்துகொண்டிருந்தது
சாலை கடந்த கிளையொன்று.
தரை புணர்ந்த தடம் விட்டுசென்றது
தண்ணீர் வாகனம் பச்சை ஒளி கடந்து... 
    
பா.ரா


நின்ற வாகனத்தில் விழித்தெழுந்தான் பிஞ்சுக்கரம் பட்டு,
கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தாள் பெண்ணொருத்தி,
மாமாவ புடிச்சுக்கோ என்றாள் மூன்று வயது மகனிடம்,


லூனுக்கு விழைந்து அழுதவனை அதட்டினாள்
உங்கப்பன் சரியா இருந்தா நமேக்கேன்டா
இந்த நிலைமையென்று குரல் தழுத்தாள்..


ங்கோ தப்புணர்ந்தவன் வேகமாய் இறங்கி
வாங்கி வந்தான் கைநிறைய பலூன்களுடன்
அழுத குழந்தையின் கைகளில் ஒன்றை திணித்து..


சிறு சிறு ஊதல்களில் பெரிதாகும் பலூனைப்போல்
சிறு சிறு ஊடல்களில் பெரிதாகும் பந்தம்
உணர்ந்தவனாய் விட்டுவந்த மனைவியையும்
குழந்தைகளையும் எண்ணி பேருந்து நிற்கும்முன் 
இறங்கிகொண்டிருந்தது அவன்மனம்
அடுத்த நிறுத்தத்தில்....  


(நேசமித்ரா, பா.ரா பிழையிருந்தால் மன்னியுங்கள் 
உங்கள் நிழலாய் நானும் வரைந்து 
வடித்து பார்க்கின்றேன் அவ்வளவே)

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..          

வெள்ளி, 25 டிசம்பர், 2009

சிந்தனை துளிகள்..3


நேற்றைய அனுபவம்,
இன்றைய சிந்தனை!
இன்றைய சிந்தனை, 
நாளைய வழிகாட்டி!
நாளைய வழிகாட்டி, 
இன்றைய தத்துவம்..

தெய்வ நம்பிக்கை என்பது 
உன் உடலில் இருக்கும் 
குருதி போன்றது,
ஒவ்வொரு துளி சிந்தும்பொழுதும் 
உன் இறை நம்பிக்கையை 
நினைவுபடுத்திக் கொள்கிறாய்.

நீ கடந்து சென்ற பாதையில்தான் 
நீ மறந்து சென்ற வழிகள் இருக்கும் 
நீ மறந்து சென்ற வழிகளில்தான் 
நீ கடந்துவிட்ட வாழ்வு  இருக்கும்..

மண்ணில் இருக்கும்
இரும்பு துகள்களுக்குகூட ஒரு 
காந்தபுலன் கிடைத்துவிட்டால் 
எழுந்துவிடுகிறது,
நீயும் உன் திறமைகளுக்கான 
புலனில் எழாவிட்டால்...
உன் திறமைகளும் மண்ணில் 
மறைந்த துகள்களே..!

 

சனி, 12 டிசம்பர், 2009

சகவாச சேறு


நத்தையிட்ட ஈரம்போல்
நகர்ந்துகொண்டிருந்த பின்னிரவு,

அரவமற்ற அறையினில்
அழுதுகொண்டே தீர்ந்துகொண்டிருந்த 
மெழுகுவர்த்தியாய் அவள்..

மது நீர்த்து மாது தீர்த்திட 
கூலி கொடுக்கிறது மாமிச பட்சி,
பட்சியாய் நுழைந்ததெல்லாம்
பச்சையாய்.....!

வீணையவள் மீட்டப்படுகிறாள் 
ஈன ஸ்வரங்களாய்..
மீட்கப்பட முடியாமல்...
தந்தியறுத்து தந்தியறுத்து
பிணைக்கப்படுகிறாள் மீண்டும் 
பந்தி படைக்க.. 

என்றோ பூக்களைகூட பாரமென 
வீசியவள் தலைக்கனம் 
சகவாச சேற்றினில் விழுந்து 
புரளமுடியாமல் புலம்புகிறது..

நாதியறுத்து வந்தவளின் 
நாடியறுக்கும் உலகினில்..

வெள்ளி, 4 டிசம்பர், 2009

ஓரடிக்கயிறு



மாலையின் முற்பொழுதொன்று,
ஆயிரமாயிரம் சுக துக்க சமிக்கைகளை
தாங்கி நின்ற தந்தி கம்பமொன்றில்
பசுவும் இளம் கன்றும் ஒன்றாக
பிணைக்கப்பட்டிருந்தது ஓரடி கயிற்றினில்..

பசியுற்ற கன்று பசுவின் மடி தேட எத்தனித்தது, 
கயிற்றின் கருணைக்குறைவால் கழுத்தழுந்தியது.
கன்றுணர்ந்த பசுவும் மடி கொடுக்க முயன்று முயன்று   
தோற்றது பிடி கொடுக்காத கயிற்றின் முனையில்..

தந்திக்கம்பத்துக்கும்  பசுவுக்கும் இடையில் 
கயிறு வீணையிட்ட தந்தியாய் துடித்தது,
எங்கோ அழு குரல் கேட்டு விழிக்கின்றான் 
உண்டு களைத்த கறவைக்காரன்..

கறக்க வந்தவன் கட்டவிழ்க்கின்றான் 
கன்றுக்கு கண நேர அனுமதியுடன்..
கயிற்றில் புண்பட்ட பசு கன்றின் மெய்பட்டு 
சிலிர்த்து முத்தமிட்டது மொத்த ரணம் தீர்ந்ததாய்..
முட்டிக்குடித்த கன்று பிரிக்கப்பட்டது
கருணையின் நேரம் தீர்ந்ததாய்..

இனி மடியின் குருதி வரை 
கறக்கவிழைபவனை பார்க்கின்றது, 
நிசியில் வன்புணரும் கடைசிக்காமுகனுக்கு  
பொறுத்துக்கொண்டு கை இறுக்கும் தாசியைப்போல்...




(இது உரையாடல் சமுக கலை இலக்கிய அமைப்பு 
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)

வியாழன், 26 நவம்பர், 2009

பசி


மாரில் தங்கமறுத்த பாலுக்கு
விழைந்து வீறிட்ட குழந்தையை
இடுப்பில் தக்க வைத்து
இறைஞ்சுகிறாள்...
இரக்கமற்றவனின் வாகன யன்னலும்
இறங்க மறுக்கின்றது..
சிவப்பு விளக்கு நிறுத்தத்தில் 
பச்சிளம் தளிரின் பசி நிறுத்தமுடியாமல்..

யாசித்தவனுக்கு 
யோசித்து சட்டைப்பை தடவி 
தொட்டு விழுந்த ஒற்றை காசில் 
திறந்தது பசியடைத்த செவிகள்..

விருந்தொன்றில் 
பசியற்றவன் புசித்த மிச்சம் 
நிரப்புகின்றது குப்பைத்தொட்டியின் 
வயிற்றினை..

யாக்கையின்
முதல் வேட்கை 
தணிய துணிந்த 
பிச்சையாய்...